“ரத்தம் குடித்து” பாலஸ்தீனை விழுங்கிய இஸ்ரேல்.. நாட்டின் மேப் பார்த்தீர்களா?

Source : One India Tamil

பாலஸ்தீன் – இஸ்ரேல் இடையே போர் வெடித்து இருக்கும் நிலையில், ஒரு நாடுகளின் நிலப்பரப்பில் கடந்த 70 ஆண்டுகளில் நிகழ்ந்த மாற்றங்களை தற்போது விரிவாக பார்ப்போம்.

இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் பாலஸ்தீனில், ஹிட்லரின் படைகளால் ஜெர்மனியில் இருந்து விரட்டப்பட்ட யூதர்களுக்கு என பிரிட்டன் தலைமையிலான மேற்கத்திய நாடுகள் அமைத்துக் கொடுத்த நாடுதான் இஸ்ரேல். பாலஸ்தீன் அரசு மற்றும் மக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் தங்கள் நாட்டை பிரித்து வேறு குழுவினருக்கு வழங்குவதை அதன் பூர்வ குடிகள் விரும்பவில்லை. பல போர்கள் வெடித்தன. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் படைபலத்தை அதிகரித்த இஸ்ரேல், பாலஸ்தீனின் நிலங்களை கைப்பற்றிக்கொண்டே வந்தது.

ஒரு கட்டத்தில் இஸ்ரேலின் நிலப்பரப்பு பெரிதாகி, பாலஸ்தீன் நிலப்பரப்பு வரைபடத்திலேயே காணாமல்போகும் அளவுக்கு நிலைமை சென்றது. தற்போது காசா, கிழக்கு ஜெருசலேம், மேற்கு கரை உள்ளிட்ட பகுதிகள் மட்டுமே பாலஸ்தீன் வசம் உள்ளன. அதையும் கைப்பற்றி பாலஸ்தீன் பூர்வ குடிகளை உள்நாட்டிலேயே அகதிகளாக்கும் வேலையை இஸ்ரேல் பல ஆண்டுகளாக செய்து வருகிறது. இப்படி பாலஸ்தீனின் நிலங்களை கைப்பற்றுவதற்காக லட்சக்கணக்கான மக்களை இஸ்ரேலிய படைகள் கொன்று குவித்து உள்ளன.

குறிப்பாக பாலஸ்தீனில் இஸ்லாமியர்களின் முக்கிய காலங்களான ரமலான் மாதம், ரம்ஜான் பண்டிகை, பக்ரீத் போன்ற சமயங்களில் இஸ்ரேல் ஏராளமான ஏவுகணை தாக்குதல்களை பாலஸ்தீன் மீது நடத்தி இருக்கிறது. ஜெருசலேமில் உள்ள அல் அக்சா மசூதிக்கு தொழுகைக்கு செல்ல விடாமல் தடுப்பது, தொழுக செல்பவர்களை மசூதிக்கு உள்ளேயே சென்று அவர்களை தாக்குவது, சிறுவர்கள் என்றும் பார்க்காமல் துப்பாக்கியால் சுட்டுக்கொல்வது என பல்வேறு மனித உரிமை மீறல்களை இஸ்ரேல் செய்து உள்ளதாக பன்னாட்டு ஊடகங்களும், ஆம்னஸ்டி இண்டர்நேசனல் போன்ற சர்வதேச அமைப்புகளும் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் பாலஸ்தீனின் நிலங்கள் இஸ்ரேலால் எந்த அளவுக்கு சுருங்கி உள்ளது என்பதை விளக்கும் பல்வேறு வரைபடங்கள் அதிகளவில் பரவி வருகின்றன. ஆண்டுகளை ஒப்பிட்டு பாலஸ்தீனில் எந்த அளவுக்கு இஸ்ரேலின் ஊடுருவல் நடந்து இருக்கிறது என்பதை அந்த வரைபடங்கள் வெளிப்படையாக காட்டுகின்றன. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பாலஸ்தீன் ஆதரவாளர்கள் கனடாவின் பேருந்து நிலையங்களில் இந்த வரைபடங்களை வைக்க அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிரபல ஆங்கில தொலைக்காட்சியான MSNBCயும் கடந்த 2017 ஆம் ஆண்டு இந்த வரைபடத்தை வெளியிட்டது. அதில், 1946 ஆம் ஆண்டு பெரிய பாலஸ்தீனுக்கு ஆங்காங்கே யூத குடியேற்றத்தை காட்டும் வகையில் மஞ்சள் நிற புள்ளிகள் உள்ளன. இஸ்ரேல் என்ற நாட்டை பிரிட்டன் உருவாக்கி மொத்தமாக யூதர்கள் அங்கு குடியேற்றப்பட்டவுடன், யூத குடியேற்றத்தை குறிக்கும் வகையில் புள்ளியாக தெரிந்த மஞ்சள் நிறம் பாலஸ்தீனின் நிலப்பரப்பை விட பெரிதாகிறது.

1949 முதல் 1967 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற இஸ்ரேலின் தொடர் தாக்குதல்கள், நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளால் பாலஸ்தீன் சிறிய நிலப்பரப்பாகவும், இஸ்ரேல் பெரிய நிலப்பரப்பாகவும் மாறியது. ஆனால், அதன் பின்னர் இஸ்ரேல் நடத்திய கோர தாக்குதல்களின் விளைவாக ஏராளமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு, பலர் அகதிகளாக வெளியேற்றப்பட்ட பிறகு தற்போது பாலஸ்தீனின் நிலப்பரப்பு என்பது 1946 ஆம் ஆண்டு யூத குடியேற்றத்தின் நிலப்பரப்பை குறிக்கும் மஞ்சள் புள்ளிகளைபோல் சுருங்கி உள்ளது.

பின்னூட்டமொன்றை இடுக