Monthly Archives: ஜூன் 2023

தாயிற்கும் மகனுக்குமான கடைசி உரையாடல்.

தாயிற்கும் மகனுக்குமான கடைசி
உரையாடல்..(Sahaba Stories)

அப்துல்லாஹ் இப்னு
ஜூபைர் (ரலி)
அவர்கள், தங்கள் தாயான அஸ்மா பின்த்
அபுபக்கர் (ரலி) அவர்களுடன் உரையாடிய
நெகிழ்வான சம்பவம்…

கிலாபத்தே உமய்யாவில்
வாரிசுமுறை
முடிசூட்டப்பட்டவர் யசீத். இந்த செயல் கிலாபத் என்னும் இறையாட்சி தத்துவத்திற்கு எதிரானது என்பதால்
எந்த முஸ்லிம் தலைவரும் இதை ஏற்பார்
இல்லை . ஆனால் யாரும் அவர்களை
எதிர்த்து கேட்கவில்லை.
நபிகளாரின் பேரர் ஆன ஹுசைன் (ரலி) அவர்களும், அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் (ரலி) அவர்களும் எதிராக குரல் கொடுத்தனர் .செயல் ரீதியாக மோதவும் செய்தனர்.

கர்பலா வில் இமாம் ஹுசைன் (ரலி)
கொல்லப்பட்டார்கள்.அதை தொடர்ந்து
அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் (ரலி)
அவர்களும் உமய்யா ஆட்சியை ஏற்காமல்
மக்காவை தனியே ஆட்சி செய்து வந்தார்கள்.

இதனால் உமய்யாகளின் கொடுங்கோல்
அரக்கன் ஹஜ்ஜாஜ் இப்னு யூசுப் மக்காவை கைப்பற்ற தாக்குதல் நடத்தினான். ஆம் கஃபா தாக்குதலுக்கு
உள்ளானது. குண்டு மலை பொழிந்தான்
அரக்கன் ஹஜ்ஜாஜ்.

இந்நிலையில் அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் (ரலி) அவர்களின் படையினர்
அனைவரும் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் போருக்கு தயாராகி தன்‌ தாயை சந்தித்து விடைபெற்று செல்ல வருகிறார்.

அன்னையோ நூறு வயதை தாண்டி
பார்வை மங்கிய நிலையில் இருந்தார்கள்.
அப்துல்லாஹ் (ரலி) போரின் நிலையை
கூறினார்.

வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய‌ அந்த வீர தாய்
அஸ்மா ரலி அவர்களுடனான உரையாடல்.

அன்னையே என் தோழர்கள் அனைவரும்
கொல்லப்பட்டனர். நானும் என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே எஞ்சியுள்ளோம்….
நிச்சயமாக மரணத்தில் நிம்மதி உண்டு..
உங்கள் எண்ணம் என்ன என்று அறிய
வந்தேன்.

அன்பு மகனே! உனக்கு நன்மை எதில் இருக்கிறது என்பதை நீ நன்கு அறிவாய். நீ சத்தியத்தின் பக்கம்தான் இருக்கின்றாய் என்பதில் உமக்கு உறுதி இருந்தால், நீ நிலைகுலையாதிருக்க வேண்டும். எதற்காக உன் தோழர்கள் போரிட்டு இறந்தார்களோ அதுபோல் நீயும் போரிடு…உயிருக்கு அஞ்சி எவ்வித இழிவையும் சுமந்து கொள்ளாதே! வாளேந்திப் போரிட்டு கண்ணியமாக மரணிப்பது, இழிவுடன் இன்பமாய் வாழ்வதை விடச் சிறந்தது. நீ வீரனாக மரணித்தால் நான் மகிழ்வேன்.

ஆனால் அழிந்து போகும் இந்த உலகை பொருந்தி கொண்டால் உன்னை விடவும் கெட்டவன் வேறு யார் இருக்கமுடியும்? எனவே, நாம் மட்டும்தானே தன்னந்தனியாக எதிர்க்கின்றோம், ஆகவே இப்பொழுது கீழ்படிந்து செல்வதே சிறந்தது என்று நீ கருதுவாயானால் அது நல்லடியார்களின் போக்கு அல்ல! நீ எது வரையில் உயிர் வாழ்ந்திடுவாய்? என்றாவது ஒருநாள் மரணம் அடையத்தானே போகிறோம்! எனவே நற்பெயருடன் மரணமாகு, அப்பொழுதான் பெருமைப்படுவேன்!’

அன்னை அஸ்மா (ரழி) அவர்களின் இந்த வார்த்தைகளை மீண்டும் ஒரு முறை கவனமாய் படித்துப் பாருங்கள். இப்பொழுது போரிடுவது மரணத்தை
தானே வலிந்து அழைப்பதற்கு சமம் என்பதையும் தம்முடைய அன்பு மகனார் கண்ணெதிரிலேயே மரணப்படுகுழியில் விழப் போகின்றார் என்பதையும் அறிந்த ஒரு தாயார் அளித்த அறிவுரையாகும் இது!

அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் (ரழி) அவர்கள் தாயாரின் இத்தகைய துணிவான சொற்களைக் கேட்டதும் மனம் நெகிழ்ந்து பணிவுடன் வேண்டினார்கள்.

என் அன்புத் தாயே, எதிரிகள் என்னைக் கொன்று எனது உடலைப் பலவிதமாகக் கோரப்படுத்தி விடுவார்களோ எனும் அச்சுகிறேன்!||

மகனே, நீ எண்ணுவது சரிதான்! ஆனால் ஆட்டை அறுத்த பிறகு அதனுடைய தோலை உரிப்பதனாலோ அதன் சதைகள் துண்டு துண்டாக ஆகுவதால் எந்த வேதனையும் ஏற்படாதே!||

உண்மையில் அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் (ரழி) அவர்கள் எதற்காக இவ்வாறு கேட்டார்களெனில் தம்மைக் கொன்று உடலைச் சிதைத்து விடுவார்களோ எனும் அச்சத்தினால் அல்ல, வயது முதிர்ந்த தமது தாய் எவ்வாறு இந்தத் துக்கத்தை தாங்கிக் கொள்கின்றார்கள் என்பதைப் பார்ப்பதற்காகத்தான்!

அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் (ரழி) அவர்கள் தம் தாயார் திருப்தியுடன் இருப்பதை அறிந்ததும் உடனே அவரின் கரங்களைப் பிடித்து முத்தமிட்டவாறு –

என் அன்புத் தாயே! நானும் இவ்வாறுதான் சிந்தித்துக் கொண்டிருக்கின்றேன். அதாவது சத்தியத்திற்கு எதிரில் இந்த உலகம் சாதாரணமானதுதான். மேலும் இஸ்லாத்திற்கும் அதன் கொள்கை கோட்பாடுகளுக்கும் உறுதியும் வலிமையும் சேர்ப்பதற்காகத்தான் இப்பணிகளையெல்லாம் நான் ஆற்றியுள்ளேன்!

மகனே, இன்ஷா அல்லாஹ் எனது பொறுமை மக்களுக்கு ஒரு முன் மாதிரியாக அமையும் என்று நான் எண்ணுகிறேன். நீ என் முன்னிலையில் சத்தியத்திற்காக உயிரை விடுகின்றாய் எனில் உனது தியாகம் எனக்கு நன்மை கிடைப்பதற்குக் காரணமாகவும் அமையும்! மேலும் நீ வெற்றி அடைந்தாலோ நான் பெருமகிழ்ச்சி அடைவேன். இப்போது அல்லாஹ்வின் பெயரை மொழிந்தவாறு புறப்படு, என்ன நடக்கிறது என்று பார்!

இதனைக் கேட்டதும் அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் தம் தாயை கட்டித் தழுவினார்கள். அஸ்மா (ரழி) அவர்கள் பார்வை இழந்திருந்திருந்தார்கள். தம் அன்பு மகனை ஆரத் தழுவியபோது அவருடைய உடலின் மீது உருக்குக் கவசம் இருப்பதை கரங்கள் உணர்த்தின.

மகனே, யார் சத்தியத்திற்காக உயிரை தியாகம் செய்ய விரும்புகின்றார்களோ அவர்கள் கவசம் அணிந்து கொள்வதில்லை. எனவே அதனைக் கழற்றிவிடு. உடுப்பை வரிந்து கட்டிக்கொண்டு எதிரிகள் மீது தாக்குதல் தொடு!
நீ வீரர் ஜுபைரின் மகன் … ஆயிரம் வீரருக்கு‌ சமமானவர் அவர்..அதுபோல்
நீயும் ஆயிரம்‌ வீரருக்கு சமமாக போரிடு
என்று அறிவுறுத்தினார்கள்!

அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் (ரழி) அவர்கள் அவ்விதமே செய்தார்கள். வீரத்துடன் போர்களம் சென்றார் .
நன்பகல் முதல் மாலை வரை போரிட்டார்.
பல எதிரிகளை சாய்த்தார். அவர்கள் கால்கள் வெட்டப்பட்டன‌ கீழே சரிந்தபோதும் போரிடுவதை நிறுத்தாது
சண்டையிட்டு வீரமரணம் அடைந்தார்….

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி
ராஜிவூன்.

அப்துல்லாஹ் இப்னு ஜூபைர் (ரழி) அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத்தில்
பிறந்த முதல் குழந்தை என்பதால்
பிறந்த அந்நாளில்
மதீனாவே மகிழ்ச்சியில் திளைத்தது.
இறந்த அன்றோ மக்கா மாநகரமே
கண்ணீர் கடலில் தத்தளித்தது….

இதை கண்ட ஹஜ்ஜாஜ் “இப்னு ஜூபைர்
கலீஃபா வை ஏற்கவில்லை . அதனால்
மக்காவை விட்டு துடைத்தெறியப்பட்டார்.
ஆதம் (அலை) அல்லாஹ் தடுத்ததை
மீறியதால் ஆதம் (அலை) சொர்க்கத்தை
விட்டு துடைத்தெரியப்பட்டார்…
இப்னு ஜுபைரை விட ஆதம் சிறந்தவர்.
மக்காவை விட சொர்க்கம் சிறந்தது”
என மக்களை மக்களை தன் பக்கம்
ஈர்க்க தன் செயலை நியாயப்படுத்தி
மக்களிடம் சூழ்ச்சி செய்தான்….

பிறகு ஹஜ்ஜாஜ் அண்ணல் நபிகளாரின் அன்புத் தோழர் ஒருவரின் உடலை அவருடைய தாயாரிடம் ஒப்படைக்காமலும் முறையாக அடக்கம் செய்ய விடாமலும் கழுமரத்தில் கட்டித் தொங்கவிட உத்தரவிட்டு தான் புரிந்து வந்த கொடுமைகளின் பட்டியலில் இந்தக் கொடூரச் செயலையும் சேர்த்துக் கொண்டான்.

மறுநாள் அன்னை அஸ்மா (ரழி) அவர்கள் வேலைக்காரப் பெண்மணி ஒருவரின் துணையுடன் தம்முடைய அருமை மகனாரின் உடலைத் தேடி வந்தார்கள். உடல் கழுமரத்தில் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தது. அபூபக்கர் சித்தீகின் மூத்த மகள் எஃகு போன்ற ஏன் அதனையும் விஞ்சும் அளவுக்கு மனத்திண்மை பெற்றிருந்தார். அப்பொழுது அவருடைய நாவு உச்சரித்த வார்த்தைகள் என்ன தெரியுமா?

இஸ்லாத்தின் இந்த மாவீரன் தியாக மறவன் இன்னும் குதிரையை விட்டு இறங்கவில்லையே!

ஹஜ்ஜாஜ் இப்னு யுசுஃப் நல்ல பேச்சாற்றல் கொண்டவன். அத்தகைய ஹஜ்ஜாஜிடம் அன்னை அஸ்மா (ரழி) அவர்களுடைய மனவேதனையையும் சோகத்தையும் உள்ளடக்கிய, ஆனால் வீரம் நிறைந்த இந்த வார்த்தைகள் எடுத்துச் சொல்லப்பட்டபோது அவர் கோபத்தால் தன் உதடுகளைக் கடிக்கலானார். நேராக அஸ்மா (ரழி) அவர்களிடம் வந்து ஒரு சொற்போரையே தொடங்கினார்.

உம்முடைய மகன் அப்துல்லாஹ் கஅபா ஆலயத்தினுள் உட்கார்ந்து கொண்டு இறைச் சட்டங்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கினாறெனில் அவருக்கு எவ்வளவு துணிச்சல்! ஆகையால்தான் அல்லாஹ் அவர் மீது இந்த வேதனையை இறக்கியுள்ளான்.

நீ பொய் சொல்கின்றாய்! என்னுடைய மகன் இறைச் சட்டங்களுக்கு எதிராக செயல்படுபவன் அல்லன். அவன் நோன்பாளியாகவும், தஹஜ்ஜூத் இரவுத் தொழுகை தொழுபவனாகவும், பரிசுத்தவானாகவும், பக்திமானாகவும் திகழ்ந்தான்! தாய் தந்தையரின் சொல்லை மதித்து நடந்தான். ஆனால் கேள்! அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஒருபோது இவ்வாறு கூறியதை நான் கேட்டுள்ளேன். அதாவது ஸகீஃப் கோத்திரத்திலிருந்து இரண்டு மடையர்கள் தோன்றுவார்கள். முதலாமவன் பொய்யனாகவும், இரண்டாமவன் கொடுங்கோலனாகவும் இருப்பார்கள் அதன்படி ஸகீஃப் குலத்தைச் சார்ந்த முக்தார் எனும் பொய்யனை நான் பார்த்துவிட்டேன். மற்றொருவனாகிய கொடுங்கோலன் இப்பொழுது என் முன்னிலையில் நின்று கொண்டிருக்கிறான்.

பளீரென சாட்டை கொண்டு தாக்குவது போன்று இந்தப் பதிலைக் கேட்டதும் ஹஜ்ஜாஜின் மனம் துடிதுடித்துப் போய்விட்டது. அவருடைய முகத்தில் இழிவும், கேவலமும் கூத்தாட தலையைத் தாழ்த்தியவாறு கொஞ்ச நேரம் மௌனமானான். நிலவிய நிசப்தத்தை சீக்கரமாகக் கலைத்துக் கொண்டு, உம்முடைய மகனுக்கு நான் நல்ல பாடம் புகட்டியிருக்கிறேன், என்று பிதற்றினார்!

நீ என்னுடைய மகனின் உலக வாழ்க்கையைத்தான் பாழ்படுத்தினாய், பரவாயில்லை! ஆனால் என் மகனோ உனது மறுமை வாழ்வை பாழ்படுத்திவிட்டான்!

இந்த அழுத்தமான பதிலைக் கேட்டதும் ஹஜ்ஜாஜ் நிதானம் இழந்தார். உணர்ச்சி வசப்பட்ட நிலையில் அவருடைய நா உளறிக்கொட்டியது.

இரண்டு வார்களுடைய இந்தக் கிழவி மதியிழந்து விட்டாள்.

இந்தக் குத்தல் பேச்சைக் கேட்டதும் அஸ்மா (ரழி) அவர்கள் ஹஜ்ஜாஜை அதட்டியவாறு கூறினார்கள்.

அல்லாஹ்வின் நபியவர்கள் உண்மையைத்தான் உரைத்தார்கள். உண்மையில் எந்தக் கொடுங்கோலனைப் பற்றி நபியவர்கள் முன்னறிவிப்புச் செய்தார்களோ அந்தக் கொடுங்கோலன் நீதான். கொடுங்கோலனே, உனது ஆணவப் பேச்சுக்கு இதோ எனது பதில். ஆம், நான் இரண்டு வார்களை உடையவள்தான்! அல்லாஹ்வின் நபிதான் அவ்வாறு பெருமையாகக் கூறி என்னை அழைத்தார்கள். ஆனால் நீயோ நபியவர்கள் சூட்டிய அதே வார்த்தையைக் கூறி என்னை இழிவுபடுத்துகின்றாய்!

ஹஜ்ஜாஜ் இதற்குப் பதில் ஏதும் கூறாமல் முகத்தைத் திருப்பிருக் கொண்டு போய்விட்டான்…!

பிறகு கலீஃபா அப்துல் மலிகிடமிருந்து, அப்துல்லாஹ்வின் உடலை அவருடைய தாயாரிடம் ஒப்படைத்து விட வேண்டும் என கட்டளை வந்தது. அன்னாரது உடலின் ஒவ்வொரு பகுதியும் சிதைத்துக் கோரப்படுத்தப்பட்டிருந்தது!

வாழ்க்கையின் இறுதி நிலையை அடைந்து விட்டிருந்து அஸ்மா (ரழி) அவர்கள், நான் என்னுடைய வீரத்திருமகனின் உடலைப் பெற்று முறையாகக் குளிப்பாட்டி கபன் இட்டு அடக்கம் செய்யாதவரை எனக்கு மரணம் வரக்கூடாது என்று பிரார்த்தனை செய்தார்கள்

அதுபோல் அவர்களின் பிரார்த்தனை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டது! சிதைக்கப்பட்டும் சிதைந்த நிலையிலும் இருந்த மகனாரின் உடலை அதன் துயரமான காட்சியைக் கண்டபோதும் அஸ்மா (ரழி) அவர்களின் நாவு அல்லாஹ்வைப் புகழ்ந்து கொண்டிருந்ததெனில்.. அவர்களின் நெஞ்சுரத்தையும் நிதானமிழக்காத பொறுமையையும் வார்த்தைகளால் எப்படி வர்ணிக்க முடியும்!

உடல் மிகவும் கெட்டுப்போய் இருந்தபடியால் மிகவும் பேணுதலுடன் குளிப்பாட்டப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது!

மகனார் அடக்கப்பட்டு ஒரு வாரத்திற்குள் தாயாரும் ஏறக்குறைய 100வது வயதில் மக்கத்து திருநகரில் மரணமடைந்தார்கள்!

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி
ராஜிவூன்….

அறிந்து கொள்ளுங்கள் சஹாபாக்களின்
வாழ்வு மிக எளிதாக அமைந்திட வில்லை…சத்தியத்திற்காக உயிர் தியாகம் செய்பவர்களாவே இருந்தனர்…

அஸ்மா பின்த் அபுபக்கர் (ரலி) வாழ்வில்
பல ஏற்றதாழ்வான‌ வாழ்க்கை பார்த்தவர்கள்…
இஸ்லாம் அறிமுகமான புதிதில் 18ஆம் நபராக இஸ்லாத்தை ஏற்றார்கள்…

அவரது கணவர் ஜுபைர் இப்னு அல்வாம்
(ரலி) இஸ்லாம் அறிமுகமாக முதல்17 வயதில் இஸ்லாத்தை ஏற்றாதால் வீட்டில் அடியும் உதைமாக சித்திரவதை செய்யப்பட்டார் . பிடிவாதம் கண்டு வீட்டில்
இருந்து விரட்டினர்.

சொத்துக்களை இழந்து இஸ்லாத்தை ஏற்றார். ஏழ்மையான நிலையில் தான்
அஸ்மா (ரலி) ஜுபைர் (ரலி) அவர்களின்
ஈமானை மட்டுமே கண்டு திருமணம்
செய்து கொண்டார். கடுமையான
வறுமையில் இருப்பதை கண்ட நபி (ஸல்)
அவர்கள் சிறு பேரிச்சை தோட்டத்தை அளித்தார்கள். அங்கு சென்று பேரிச்சை கொட்டைகளை சேகரித்து பல மைல் தூரம் சுமந்து வந்து தமது வீட்டு ஒட்டகங்களுக்கு அந்த பேரிச்சை கொட்டைகளை இடித்து உணவாக கொடுப்பார்கள்….

சிறிது காலத்தில் ஜுபைர் (ரலி) வியாபாரம் செழிப்பாக இலாபம்
கிடைத்தது‌….

இருந்தும் தடிமனான ஆடையும் எளிய
வாழ்வியலையே விரும்பினர்.

நபிகளாரின் ஹிஜ்ரதிற்கு பெரிதும் உதவிய பெண்மணி அபூஜஹ்ல் நபிகள்
எங்கு இருக்கிறார் என்பதை அறிய
அபூபக்கர் ரலி வீட்டிற்கு விரைந்தார்.
கதவுகள் தட்டப்பட்டது…வெளியே வந்ததோ இளம் வீரபெண் அஸ்மா (ரலி)
உன் தந்தையும் முஹம்மது ம் எங்கே இருக்கிறார் என்று மிரட்டினார்..
எதற்கும் அஞ்சவில்லை அவர்கள்.

கன்னங்களில் ஓங்கி அடித்தார்…
எதற்கும் சளைக்காமல் துணிகரமான
அத்துணை இன்னல்களையும் தாங்கி
கொண்டு நபிக்கும் தம் தந்தைக்கும்
உணவு தயாரித்தார்கள்

தவ்ர் குகையில்
இருந்த நபிக்கும் அபூபக்கர் (ரலி)க்கும்
எதிரிகளின் கண்களை மண்ணை
தூவி சாதூரியமாக உணவு கொண்டு
சென்றவர். ஆடுகளை மேய்த்து கொண்டு
போய் அங்கு ஆட்டின் பாலை கறந்து
அவர்களுக்கு கொடுப்பார்கள்…
எதிரிகள் காலடி சுவடுகளை கண்டுபிடிக்காமல் இருக்க ஆட்டு மந்தையை ஒட்டி வந்தார்கள்.
ஹிஜ்ரத் நீண்ட பயணித்திற்காக
உணவு தயாரித்து கட்ட துணி இல்லாமையால் தனது இடுப்பில் கட்டிய
துணியை இரண்டாக கிழித்து அதில்
ஒன்றை தனக்கும் ஒன்றை உணவை கட்டவும் பயன்படுத்தியதால்…

நபிகளாரால் “தாதுல் நிதாகைன்” “இரண்டு
வார்வுடையவரே” என்று பட்டம்
சூட்டினார்கள்…

தமது மகன் ஆட்சி செய்ததையும் கண்டார்..
தனது மகன் கொல்லப்பட்டு சிதைந்து
உடலோடு கிடந்ததையும் கண்டார்கள்
அந்த வீர பெண்மணி அஸ்மா பினத்
அபூபக்கர் (ரலி)…

நட்புடன்
முஹம்மத் ஜூபைர் அல்புஹாரி ❣️

உறையும் இரத்தம் கர்பலாவின் யுத்தம் 2

உறையும் இரத்தம் கர்பலாவின் யுத்தம்

கல்லும் கரையுமே கர்பலா வின் கதைகேட்டால்…

கண்கள் கண்ணீர் சிந்துமே இமாம்
ஹுசைனின் (ரலி) தியாக நிலை கேட்டால்…

கர்பலா என்ற வார்த்தையை உச்சரிக்கும் போதே மனம் கணக்கிறது…

ஹுசைன் (ரலி) அவர்களை கூபாவிற்கு தலைமை ஏற்க வரும்படி கூபா வாசிகளின் 150 பக்க கடிதத்தை நம்பி அஹ்லே பைத் 72 உறவினரோடு மதீனாவிருந்து
1100 மைல் தூரம் உள்ள கூபாவிற்கு
பயணித்த இமாம் ஹுசைன் இப்னு அலி(ரலி) கர்பலா என்னும் பகுதியில்
உபைதுல்லாஹ் இப்னு ஸியாத்
படையால் முற்றுகையிடப்பட்டார்…

உணவு தண்ணீர் அருந்த தடுக்கப்பட்டனர்.
காமுகன்,தாகத்திற்கு கூட மது அருந்துபவன் தீய செயல்கள் செய்யும் யஸீத்தை தலைமையை ஏற்க வற்புறுத்தினர்.

அதை மறுத்து மதீனா திரும்பவாகவும்
குடும்பத்தை விடுதலை செய்யவேண்டும்
என கோரிக்கை வைத்தார்கள் இமாம்
ஹுசைன் (ரலி).

எதையும் ஏற்காத அந்த படை யஸீத்திற்கு பைஅத் செய்ய கட்டாயபடுத்தியது.

மூன்று‌நாள் உணவு தண்ணீர் இல்லாமல்
பசியில் நாவறண்டு குழந்தைகள் அழ
ஆரம்பித்தன….

குழந்தைகளுக்காவது தண்ணீர் தாருங்கள் என வேண்டினார்கள்
போராடினார்கள் இமாம் ஹுசைன் (ரலி)
கூபா படையினருக்கு இதயத்திற்கு பதில்
கல்லை வைத்து படைத்தானோ இறைவன். கல்லாய் உறைந்து நின்றனர்.

முஹர்ரம் 10 நாள்…
அமைதி காத்த இமாம் ஹுசைன் ரலி குடும்பத்தினர்.
பசி பட்டினியால் மரணிப்பதற்கு பதில்
போராடி இறப்பதே மேல் என‌
முடிவெடுத்தனர்.

அலியுல் அக்பர் போரிட தந்தை ஹுசைன் (ரலி) அவர்களிடம்‌ அனுமதி பெற்று போர்களம் சென்றார்….

சிங்கத்தை போல போரிட்டார். 17 வயது பாலகன்‌ …அலி (ரலி) பேரர்….கைகள் வெட்டப்படும் வரை போரிட்டார்கள்… இறுதி மூச்சு‌ காற்றை
சுவாசித்த அவர்களை ஹுசைன்‌(ரலி)
தன் தோல்களில் சுமந்து வந்தார்கள்.
” ஓ என் அருமை மகனை… நிச்சயமாக
நீதி தீர்ப்பு நாளன்று உன்னுடைய ஷஹாதத்திற்கு உன் பாட்டனார் ஸல்லல்லாஹூ அலைஹிசல்லம் சாட்சி கூறுவார்கள்‌ ” என்றார்கள்…

பிறகு நபி (ஸல்) அவர்கள் உறவினர்கள்
ஹுசைன் (ரலி) பக்கம் சுற்றி அரணாக
நின்று போராடினார்கள் அவர்கள் சாதாரண மனிதர்கள் அல்ல… சஹாபாக்கள்..

அவர்கள் கொல்லப்படும் வரை ஹுசைன் (ரலி) அவர்களை காத்தனர்…

பிறகு காசிம் இப்னு ஹசன் (ரலி) அழகிய
பாலகன் போர்களம் புகுந்தார்….

அவர்கள் தலை வெட்டப்படும் வரை போராடினார்கள்…

இறுதியாக அப்பாஸ் (ரலி) அவர்களும்
ஹுசைன் (ரலி)‌ அவர்களும் மட்டுமே
எஞ்சி இருந்தனர்…

கடுமையாக போரிட்டனர்….மூன்று நாட்கள் ஒரு துளி தண்ணீரும் அருந்தாதவர்கள்…

குழந்தைகள் பசி தாகம் கண்டு மனம்
பொறுக்காத அப்பாஸ் (ரலி) அவர்கள் நதியிலிருந்து தண்ணீர்கொண்டுவர முயற்சித்தபோது
எதிரிகள் அம்பு மலை பொழிய அப்பாஸ்
அவர்கள் இறந்தார்கள்.

இப்படி குடும்பத்தினர் அனைவரும் கொல்லப்பட்டனர்…

இறுதியாக ஹுசைன் (ரலி) மட்டுமே
மீதம் இருந்தார்கள்.
தன் குழந்தையை கையில் சுமந்து வந்து
“உங்களுக்கு என் மீது தானே பகை இந்த
குழந்தை என்ன செய்தது..!!! இந்த
குழந்தைக்கு தண்ணீர் தாருங்கள்” என்று இரைஞ்சினார்கள்…

கல்நெஞ்சம் கொண்ட எதிரிகள் தண்ணீர் தருவதற்கு பதில் பிஞ்சு குழந்தையை நோக்கி அம்பு எய்தினர்.
துடிதுடித்து அந்த குழந்தை ஷஹீதானது.

ஹுசைன்‌(ரலி) அவர்கள் கண்கள்
கண்ணீருடன் இறைவனிடம்”
அல்லாஹும்ம ஸப்பிர்னா அலல் கழா…
அல்லாஹும்ம ஸப்பிர்னா அலல் கழா…
அல்லாஹும்ம ஸப்பிர்னா அலல் கழா…

“இறைவா இந்த துன்பங்களை தாங்கி கொள்ளும் பொறுமையை கொடு ”
இறைவா இந்த துன்பங்களை தாங்கி கொள்ளும் பொறுமையை கொடு ”
இறைவா இந்த துன்பங்களை தாங்கி கொள்ளும் பொறுமையை கொடு ”

என‌ கையேந்திஇரைஞ்சினார்கள்.

எவ்வளவு பெரிய துன்பம் நிகழ்ந்தபோதும் அவர்கள் இறைவனின்
பக்கமே திரும்பினார்கள்…

கூபா படையினரில் ஒருவர் குறிப்பிடுகிறார்…
வல்லாஹி இப்படி வீரமான ஒரு மனிதரை யாரும் பார்த்திட முடியாது… தங்களை சுற்றி அவர்கள் உறவினர்கள் சடலங்கள் கிடந்தபோதும்…வீழ்ந்திடாது திடமாக அமர்ந்திருந்தார்கள்….
ஏன் நிச்சயமாக அவர்கள் அவர்களின் இலக்கு சுவனமாக இருந்தது…
இன்னும் சுவனம் சில நிமிடங்களில் தான் உள்ளது என்பதை உணர்ந்திருந்தார்கள்…

அப்துல்லாஹ் இப்னு ஜாபர் (ரலி) தனது மாணவர்களிடம்…”சுவனவாசியை பார்க்கவேண்டுமா…இதோ ஹுசைனை
பார்த்துக்கொள்ளுங்கள்…
நபிகள் கூறினார்கள்… ஹுசைன் சுவனவாசி என்றார்கள்…

சிங்கத்திற்கு பிறந்த சிங்கத்தை யாரும்
எளிதில் நெருங்கிட முடியவில்லை…

ஹுசைன் (ரலி)‌ அவர்கள்
நதிக்கரை அருகில் வந்தார்கள்…
தங்களின் இறுதி நிமிடங்களை அறிந்த
ஹுசைன் (ரலி) நதியில் நீர் அருந்த சென்றார்கள். கூபா படையினர் அம்புகளை எறிந்தனர். காயம்பட்டு
தரையில் சரிந்த ஹுசைன் (ரலி) அவர்களை எதிரிகள்‌ சூழ்ந்தனர்…
ஹுசைன் (ரலி) அவர்கள்‌
“கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள்…
கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள்…
என இறைஞ்சினார்கள்…
“மறுமை நாளில் நீங்கள் வரும்போது
என் பாட்டனார் நபிகளாரிடம் ஹவ்லுல்
ஹவ்தர் தடாகத்தில் நீங்கள் தண்ணீர்
கேட்கும் மறுமை நாளை நீங்கள் எண்ணிக்கொள்ளுங்கள்….”
என குமுறினார்…

இந்த காட்சி மிகவும் மனதை உருக்கும்
நிகழ்வாக இருந்தது…
இதை கேட்டு கூபா படையின் பலர் பின்வாங்கினர்…

“இன்னும் அவரை கொல்லவில்லை யா ???”
என படை தலைவன் ஷிம்ர்‌ சத்தமிட…

இந்த காட்சியை எண்ணிப்பாருங்கள்
தன்னுடைய மகள் , மனைவி, சகோதரிகள் அனைத்து பெண்கள் முன்னிலையில் வெட்டப்பட்டார்கள்…

நபிகளாரின் ஈரக்குலையான பாத்திமா
நாயகியின் ஈரக்குலை சுவனம் சென்றது…

60 முறை வெட்டினர்…
அவர்களில் ஒருவன் அவர்களின் தலையை தனியாக எடுத்தான்…

அது யாருடைய தலை…!!!
நபிகளார்‌முத்தமிட்ட
அவர்களின் மார்பிலும்
மடியிலும் தவழ்ந்து விளையாடிய
ஹுசைன் (ரலி) அவர்களின் தலை…

பிறகு ஹுசைன் (ரலி) குடும்ப பெண்கள்
அனைவரையும் கைது செய்தனர்…

ஜைனப் (ரலி) அவர்கள் ஹுசைன் (ரலி)
சகோதரி … தலையில்லாது துண்டான ஹுசைன் (ரலி) உடலை கடந்து செல்கையில் துக்கம் தாங்க இயலாமல் குமுறினார்கள்…
யா முஹம்மதா…!!!
யா முஹம்மதா…!!!(ஸல்)
உங்கள் பேரர் ஹுசைனின் நிலையை பாருங்கள்..!!!
போர்களத்தின் ஆடைகளும் உடலும் இரத்தத்தால் நிரப்பிய இருக்கும்
நிலையை பாருங்கள்…!!!

யா முஹம்மதா…!!!
யா முஹம்மதா…!!!
கை கால்கள் வெட்டப்பட்டு கோரமாக
கிடக்கும் உங்கள் பேரர்கள்
நிலையை பாருங்கள்….!!!

(அவர்களின் உடலை குதிரைகளை ஏறவிட்டு மிதித்து அவமதித்தனர்…)

யா முஹம்மதா…
யா முஹம்மதா…
இன்று உங்கள் மகள்கள்‌ சிறை வைக்கப்பட்டுள்ளோம்….

உங்கள் வம்சம் கொல்லப்பட்டது….

இதை கேட்ட கூபா படையினர் பலர்..
தாங்கள் செய்த பாவத்தை எண்ணி
அழுதனர்…

அவர்களின் பாவத்தை போக்க அல்லாஹ்
ஹுசைன் (ரலி) உடலை அடக்கும் பாக்கியத்தை கூட தரவில்லை…

பனு அஸத் கோத்திரத்தினர் சென்று அவர்களின் உடல் அடக்கம்‌செய்தனர்…

ஹுசைன் (ரலி) மற்றும் அவர்களின் உறவினர்கள் தலைகள் அனைத்தும்
டெமாக்ஸ்ஸில் உள்ள உம்மய்யா பள்ளியில் காட்சிக்கு வைத்தனர்…

வரலாற்றில் கருப்பு பக்கம்
இந்த கர்பலா

(நபிகள் தங்கள் பேரக் குழந்தைகளோடு விளையாடிக் கொண்டு இருந்தார்கள்.

அப்போது பேரர் ஹசன் (ரலி) அவர்களுக்கு உதட்டிலும் , பேரர் ஹுசைன் (ரலி) அவர்களுக்கு கழுத்திலும் முத்தமிட்டார்கள். இந்த விஷயத்தை ஹசன் (ரலி) அவர்கள் தாயார் பாத்திமா (ரலி) அவர்களிடம் தெரிவித்தார்கள் .

பாத்திமா ரலி அவர்கள், நபிகள் நாயகம் ஸல் அவர்களிடம் வந்து “நாயகமே பேரர்கள் மத்தியில் முத்த விஷயத்தில் ஏன் பாகுபாடு செய்தீர்கள் ” என்று வினவினார்கள்.

அருமை மகளே!இவர்கள் பெரியவர்களான பின்னர் ஹசன் (ரலி ) நஞ்சு ஊட்டப்பட்டு இறப்பார்கள் அதனால்தான் உதட்டில் முத்தம் கொடுத்தேன், இளயவர் ஹுசைன் கழுத்து வெட்டப்பட்டு இறப்பார்கள் அதனால்தான் கழுத்தில் முத்தமிட்டேன் என்று விளக்கமளித்தார்கள்.

இச் செய்தியை செவியுற்ற அன்னை பாத்திமா அவர்கள் அழுதுக் கொண்டே கேட்கிறார்கள் நாயகமே! ஒவ்வொரு இறைத் தூதருக்கும் ஒரு விஷேசமான பிரார்த்தனையை அல்லாஹ் வழங்கியுள்ளானே, அது போன்று அல்லாஹ் உங்களுக்கும் வழங்கியுள்ளானே அதைக்கொண்டு உங்களுடைய பேரர்களை நீங்கள் காப்பாற்ற வேண்டும் ” என்று கெஞ்சுகிறார்கள் .



அப்போது அண்ணலார் பெருமானார் அவர்கள் கண் கழங்கியவர்களாக மகளே அதை மறுமையில் எனது சமுதாயத்தாரின் நலனுக்கு வேண்டி மாற்றி வைத்து விட்டேன் என்று கண்ணீர் மழ்க கூறினார்கள் . எனவே அதனை எனது பேரக் குழந்தைகளுக்காக இங்கு பயன் படுத்த முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்ர்கள் .
அண்ணல் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒவ்வொரு இறைத்தூதருக்கும் தம் சமுதாயத்தாருக்கு சிறப்பு பிரார்த்தனை செய்ய உரிமை உண்டு, நான் எனது பிரார்த்தனையை மறுமை நாளில் எனது சமுதாயத்தாருக்கு வேண்டி பரிந்துரை செய்ய பத்திரப்படுத்திவிட்டேன் ”

(ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) .
முஸ்லிம்.)

தன் குடும்பத்தினர் ஏதேனும் பிரட்சனையில் சிக்கிக் கொண்டால், உடனே தன்னிடம் உள்ள பணப் பலம், படைப்பலம், ஆட்சி அதிகாரப் பலம் போன்றவற்றை பயன் படுத்தி அதில் இருந்து விடுவிப்பதற்கு வழி தேடுவோரைத்தான் இவ்வுலகம் கண்டிருக்கும்.

ஆனால் தமக்குரிய விஷேச உரிமைகளைக் கூட தனது சமுதாயத்தாருக்காக பயன்படுத்துவேன் , இங்கு எனது குடும்பத்தாருக்கு பயன்படுத்த மாட்டேன், என்றுரைத்த அண்ணலம் பெருமானார் அவர்கள் போன்று தங்கள் சமுதாயத்தாரின் மீது அக்கரை உள்ள தலைவரை இவ்வுலகம் இதுவரை கண்டதில்லை , இனிமேல் காணப்போவதும் இல்லை , சிறந்த தலைவருக்கு இதுவே முன்னுதாரணம் .)

நட்புடன்

முஹம்மத் ஜூபைர் அல்புஹாரி…

அமீருல் முஃமினீன் உதுமான் இப்னு அப்பாஸ் (ரலி)

அமீருல் முஃமினீன் உதுமான் இப்னு அஃப்பான் (ரலி)

இவர்களின் பெயர் முஸ்லிம்களால் நன்கு அறியப்பட்டது..

அவர்கள் வரலாறு பெரிதும் அறிந்திருக்க வாய்ப்பில்லை…

ஹுலாபாயி ராஸித்தீனில் மூன்றாம்
கலீஃபா….

மிகவும் மென்மையானவர்…

காமிலுல் ஹாயா வல் ஈமான்
வெட்கத்திலும் ஈமானிலும்
முழுமையானவர்…

82 வயது வரை வாழ்ந்து கொடூரமான
முறையில் கொல்லப்பட்டவர்…

நபிகளாரின் மிக நெருக்கமான
உற்ற தோழரை முஸ்லிம்களில்
ஒரு கூட்டம் கிளர்ச்சியாளராக அல்லது
பிரிவினையாளர்களாக மாறி கொலை செய்தது.

நபிகளாரின் இறப்புக்கு பின் முஸ்லிம்கள்
மத்தியில் பிரிவுகள் உண்டானது
அதன் உட்சபட்சம் தான் உதுமான்(ரலி) அவர்களின்
படுகொலை நிகழ்வு…

குறிப்பு :இந்த வரலாறு அரசியலுக்கு அப்பாற்பட்டு நபி தோழரில் மிக முக்கிய தோழரின் வரலாறாக மட்டுமே பதியப்படுகிறது.
முழுமையாக படியுங்கள்…
நிச்சயம் மனங்களை ரணமாக்கும் இந்த வரலாற்றின் தாக்கம் உங்களை சஹாபாக்கள் மீது அளப்பெரிய மரியாதையை உண்டாக்கும்
இன்ஷா அல்லாஹ்.

*சிறு அறிமுகம்

அப்தாம்ஸ் என்னும் பானு உமய்யா கிளை கோத்திரம் .
நபிகளாரின் தோழராகவும் மருமகனாகவும் இருந்தவர்..
பெரும் செல்வந்தர்…

அபுபக்கர் (ரலி) அவர்களின் நெருங்கிய நண்பராக இருந்து இஸ்லாத்தை ஏற்றார்கள்… வீட்டில் கடும் எதிர்ப்புகள்
இப்போதெல்லாம் பெண் மீது கொண்ட காதலுக்கு சிறைவாசம் இருக்கிறார்கள்..

ஆனால் அன்றோ இஸ்லாத்தின் மீது
அவர்கள் கொண்ட காதலுக்காக
சிறை வைக்கப்பட்டனர்…
நபியை சந்திக்க கூடாது…
தொழுகை செய்ய கூடாது…
என குடும்பத்தினர் வீட்டில் கட்டிவைத்து
கொடுமை படுத்தினர்…

முதல் ஹிஜ்ரத் குழுவில் உதுமான் (ரலி)
அவர்கள் அபிசீனியா சென்றனர்…

பிறகு மதீனா வந்து சேர்ந்து கொண்டார்கள்…

மிக இளகிய மனம்
ஏழைகளை கண்டால் இறங்கிடும்
குணம்….

நபிகளாரின் மகளான ருகையா (ரலி)
அவர்களை மணந்தார்கள்…

பத்ரு போரின் வெற்றி நேரம் உடல்நலம் குறைவால் ருகையா(ரலி) அவர்கள்
மரணித்தார்கள்…

அதை தொடர்ந்து அவர்கள் மகனார் சிறு பிராயத்திலேயே மரணித்தார்கள்.
இதை தொடர்ந்து உதுமான் (ரலி) மிக
வருத்தமுடன் இருந்தார்கள்.

யாருடனும் பேச்சு தொடர்பு இல்லாமல்
அவர்கள் ஊமையாகிவிட்டார்களோ
என்று எண்ணும் அளவிற்கு சோகத்தில்
உறைந்தார்கள்.

இதை கண்டு நபி அவர்கள் உதுமான் (ரலி) அவர்களிடம் வினவ தங்களின்
உறவுமுறையாக இருந்த அந்தஸ்தை
இழந்து விட்டேனே அதனால் தான்
வருத்தம் கொண்டிருந்ததாக கூற

நபிகளார் தமது
மகளான உம்மு குல்தூம் (ரலி)
அவர்களை திருமணம் செய்து வைத்தார்கள்…

இதன் காரணமாக, ”துன்னூரைன் – இரு ஒளி விளக்குகளைப் பெற்றுக் கொண்டவர்”” என்ற சிறப்புப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்கள்.

அவர்களும் சிறிது காலத்தில்
இறந்து விடுவார்கள்…

இதன் பிறகு நபிகளார் கூறுவார்கள்.
“வல்லாஹி என்னிடம் பதினான்கு பெண் பிள்ளைகள் இருந்திருந்தால் ஒவ்வொன்றாக அவர்கள் இறக்கும் வரை உதுமான் அவர்களுக்கே மணமுடித்து வைத்திருப்பேன் என்றார்கள்.
அந்த அளவிற்கு நபிகளாரின் நேசத்திற்கும் கண்ணியத்திற்குரிய
நபி தோழர் இந்த
உதுமான் (ரலி).

இறைதூதரின் எழுத்தாளராக இருந்து
அல்குர்ஆனை எழுதிய‌ பெருமை இவர்களை சாரும் ,

நபிகளார் ஒவ்வொரு முறையும்
முஸ்லிம்கள் தேவையை சுட்டிக்காட்டி
அதற்கு பொருளாதார உதவி செய்பவர்
யார்? என்ற கேள்விக்கு முதலில் “நான்”
என முன்வந்து கொடையளிக்கும்
நபிதோழரில் முதன்மையானவர்
உதுமான் (ரலி).

இளமையிலேயே சிரியா வரை சென்று
வணிகம் செய்து வந்தவர்.

ஹிஜ்ரி 9 இல் பைசாந்திய பேரரசு மதீனாவை தாக்கவருவதை அறிந்து
ஆயிரம் ஒட்டகம், ஐம்பது குதிரை,
ஆயிரம் தங்க கட்டிகளை படைக்கு பரிசளித்தார்கள்..

மஸ்ஜித் நபவியை விரிவாக்கம் செய்தார்கள்.
குர்ஆனை முழு கோர்வையான அமைப்பில் கொண்டுவந்தவர்களும்
இவர்களே…

நபிகளார் கூறினார்கள்.
“ஒவ்வொரு நபிக்கும் சுவனத்தின் தோழர் உண்டு.என்னுடைய தோழர்‌ உதுமான் ஆவர்.

ஹுதையியா உடன்படிக்கைக்கு தூதூவராக உதுமான் (ரலி) அவர்களை
நபிகள் குரைஷிகளிடம் அனுப்ப
உதுமான் (ரலி) அவர்களை குரைஷிகள்
கொன்றுவிட்டதாக வதந்திவர
நபிகள் சினமுற்று சஹாபாக்களை
அழைத்து பழிக்கு பழி வாங்க வேண்டும்
கொன்றவரில் ஒருவரையும் விட
கூடாது என்று எல்லா சஹாபாக்களிடம்
பையத் என்னும் சத்தியப்பிரமாணம்
செய்தார்கள் . இதை பையத் ரிழ்வான் என்று வரலாற்றில் கூறப்படுகிறது.

அதன் பின் உதுமான் (ரலி) உயிருடன்
திரும்பிவிட்டார்கள்.

*ஆட்சி காலம்.

கலீஃபாவாக 12 ஆண்டுகாலம் ஆட்சி
செய்து இஸ்லாமிய பேரரசை விரிவாக்கம் செய்த பெருமை
இவர்களை சாரும்…

சிரியா ஆளுநரான முஆவியா (ரலி) தலைமையில் முதல்
கடற்படையை ஹிஜ்ரி 28ல் நிறுவி இஸ்லாமிய வரலாற்றில் முதல் கடல் யுத்தம் செய்து
வெற்றியும் பெற்றனர்…

அஸர்‌ பைஜான்…
அர்மேனியா…
சைப்ரஸ் தீவு…
வட ஆப்பிரிக்கா…
மொராக்கோ
போன்ற பிரதேசங்கள்‌ வெற்றி
கொள்ளப்பட்டது…

*உள்நாட்டு குழப்பம்..

நாட்டை விரிவாக்கம் செய்வதில் கவனம் செலுத்தியதால் நிர்வாகத்தில் குழப்பம் ஏற்படுத்தியது.
அப்துல்லாஹ் இப்னு‌சபா என்ற யூதன்
முஸ்லிம்களிடம் தன்னை‌ முஸ்லிமாக
காட்டிக்கொண்டு உதுமான் (ரலி)
ஆட்சியை கவிழ்க்க திட்டங்கள்
தீட்டினான்…

போலி கடிதங்களையும் போலி அரசாணைகளையும் தயாரித்து
மதீனாவாசிகளை திசை திருப்பினான்…

*நிலைமை மோசமானது…

அதிப்தி அமைதியின்மை மதீனாவில்
மேலோங்கியது…
இதனால் அனைத்து கவர்னர்களையும்
அழைத்து மாநாடு நடத்தினார்கள்
உதுமான் (ரலி)…
அவர்கள் அங்கு உரை நிகழ்த்தினார்.

இந்த காலம் நபிகள் அறிவித்த குழப்பத்திற்குரிய காலமாக
இருக்கும் என அஞ்சிகிறேன்.
என்னால் இயன்றவரை இரக்கத்தை
கொண்டும் மன்னிப்பைகொண்டும்
நிலைமையை சரி செய்வேன்.
தீமையின் வாசலை அடைப்பேன்.
இதில் மக்களுக்கு எந்த குறையும்
வைக்கமாட்டேன்.
மறுமையில் இறைவனை சந்திக்கையில் என் மீது குற்றம் சாட்டப்படும் அளவிற்கு நிலைமையை
கொண்டு செல்லமாட்டேன்.
இதனால் இந்த உதுமான் மரணித்தால்
நன்மை பெற்று கொள்பவனாக இருப்பேன்…

மாநாடு நிறைவுற்றது…

முஆவியா (ரலி) உதுமான் (ரலி ) அவர்களை
மதீனாவில் பாதுகாப்பு இல்லாத சூழலால் தன்னோடு சிரியா வரும்படி அழைத்தார்கள்….

ஆனால் நபிகளாரின் நெருக்கத்தை
விட்டு தன்னால் வர இயலாது என்று
கூறிவிட்டார்கள்…
இறந்தாலும் நபிகளாரின் இறந்த
மண்ணில் தான் இறப்பேன் என்று
கூறிவிட்டார்கள்….

சிரியா படையை அனுப்பிவைக்கட்டுமா?
என முஆவியா (ரலி) வினவ அதற்கும்
மறுத்துவிட்டார்கள்…
மதீனா வாசிகளின் நெருக்கத்தை அது
குறைத்திடும் என்றார்கள்..

*சதிவலைகள்…

எகிப்து ஆளுநரின்‌ ஆட்சி பிடிக்காது அங்கிருந்த மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பினர்.அதில் பலர் கிளர்ச்சியாளர்களாக மாறினர்.

எகிப்து உள்ளான‌ கூபா பாஸரா கிளர்ச்சியாளர்கள் . ஹஜ் வரை காத்திருந்தனர்…
ஹஜ் செய்வதுபோல் வந்து மக்காவிற்கு அடுத்து மதீனாவில் நுழைந்து உதுமான்(ரலி) அவர்களை கொல்ல
திட்டம் தீட்டினர்…

சிறு சிறு குழுக்களாக ஆயிரம் பேர்
சேர்ந்து மதீனாவிற்கு சில மைல்கள்
தூரத்தில் முகாமிட்டனர்…

*அலி(ரலி) அப்புறபடுத்துதல்

அலி(ரலி) அவர்களிடம் உதுமான் (ரலி)
அவர்களை அப்புறபடுத்த‌வேண்டி
இருந்தார்கள். அதை ஏற்ற மக்களிடம்
உரை நிகழ்த்த அலி (ரலி )வேண்டிணார்கள்…

உதுமான் (ரலி) அவர்கள் மஸ்ஜித் நபவியில் கடைசியாக நடத்திய
உரை இதுதான்….

நான்‌தவறு செய்திருப்பின்
உங்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்…
உங்களில் யார்
எனக்கு அறிவுரை வழங்கினாலும் நான்
செவிமடுத்து கேட்பேன். அல்லாஹ்வின் மீது சத்தியமாக , சத்தியத்தை நிலைநாட்ட ஒரு அடிமையின் வேண்டுகோளை கூட செவிமடுப்பேன்..
என்றார்கள்…
உரை முடித்ததும் கண்களில் கண்ணீர்
தேம்பி தேம்பி அழுதார்கள்…
அவையோரும் அழுதனர்..

அலி(ரலி) அவர்கள் எகிப்து வாசிகளின்
கோரிக்கையை கேட்டு புகார்கள்
சரி செய்தார்கள்…
மதீனாவை சூழ்ந்த மேகங்கள் கலைந்தது.

*மர்ம கடிதம்

எகிப்து வாசிகள் திரும்பி சென்றதாக
நிம்மதி பெருமூச்சு விட்ட அடுத்த கணமேஒரு மர்ம கடிதத்தை கொண்டு திரும்பி மதீனா வந்தனர்..

அது ஒரு தூதுவர் எகிப்து ஆளுநருக்கு
உதுமான் (ரலி) எழுதியது‌ என்றும்
அதை தாங்கள் வழிமறித்து வாங்கி
வந்தோம் என்றும் அதில் மதீனாவிலிருந்து திரும்பி வரும்
எகிப்து வாசிகளை கொலை செய்யும்படி
எழுதி இருந்தது..

அந்த கடிதம் எப்படி கிடைத்தது என அலி(ரலி) வினவ பதில் சொல்லாமல்
உதுமான் (ரலி) வீட்டை முற்றுகையிட்டனர்.

உதுமான் (ரலி) அவர்களின் வயது முதிர்வின் காரணமாக அவர்களுக்கு கீழ்
இருந்தவர்களே நிர்வாக குழப்பங்கள்
செய்தாக வரலாறு பதிகிறது.

கிளர்ச்சியாளர்கள் மிக துணிவாக
செயல்பட ஆரம்பித்தனர்…

உதுமான் (ரலி) அவர்களை எங்கும்
சுதந்திர மாக செல்ல அனுமதிக்க
வில்லை தாம்‌ யாருடைய நெருக்கத்திற்காக மதீனாவை விட்டு
வர மறுத்தார்களோ அந்த நபியின்
மஸ்துன்‌நபவி செல்வதை தடுத்தனர்…
உணவு பொருட்கள் எடுத்து செல்ல ஏன்
தண்ணீர் கூட எடுக்க அனுமதிக்கவில்லை.

* எல்லை மீறிய முற்றுகை….

உதுமான் ( ரலி ) அவர்கள் வீடு தாக்குதலுக்கு உள்ளானது…
வீட்டின் கதவுகள் தாழிடப்பட்டது..
கற்கள் வீசி வீட்டை தாக்கினர்..

இதனால் அலி(ரலி) பாதுகாப்பு காவலர்களாக ஹசன் (ரலி),
ஹுசைன் (ரலி), அப்துல்லாஹ் இப்னு
ஜுபைர் (ரலி) ஆகியோரை உதுமான் (ரலி) உதுமான் (ரலி) வீட்டின் முன் நிறுத்தினார்கள்.

மதீனா வாசிகள் ஹஜ் செய்ய புறப்பட்டனர்.
இந்த தருணத்தை கலவரகாரர்கள் நன்றாக பயன்படுத்தி
கொண்டனர்…
உதுமான் (ரலி) கவர்னர்களுக்கு கடிதம்
எழுதினார்கள் ஆனால் அதில்‌ அவர்கள்
முஸ்லிம்கள் ஒற்றுமையை மட்டுமே
வலியுறுத்தி எழுதினார்கள். படை உதவி
கேட்கவில்லை. நபிகளார் மண்ணில்
முஸ்லிம்கள் இரத்தம் சிந்த கூடாது
என்ற எண்ணம் மேலாங்கி இருந்தது.
இறைவனின் விதியை ஏற்று கொள்ள
தயாராகவே இருந்தார்கள்.

இமாம் ஹஸன் (ரழி) அவர்களும், இன்னும் சிலரும் கலவரக்காரர்களுக்கு எதிராக ஆயுதமேந்துவதற்காக உஸ்மான் (ரழி) அவர்களிடம் அனுமதி கோரிய பொழுது, அனுமதி மறுத்த உஸ்மான் (ரழி)அவர்கள் தன்னுடைய வீட்டை விட்டும் வெளியேறிச் சென்று விடுமாறு கேட்டுக்கொண்டார்கள்.

தன்னால் ஒரு உள்நாட்டுக் கலவரம் ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்த அவர்கள், தன்னுடைய இன்னுயிரையே விலையாகத் தர முன்வந்தார்கள்.

* படுகொலை …

நாட்பது நாள் முற்றுகை தொடர்ந்தது… உதுமான் (ரலி) அவர்களோ 40 நாட்கள் உணவு தண்ணீர் இல்லாமல்
இல்லாமல் இருந்தார்கள்…

கஸ்ஸாலி இமாம் இஹ்யாவுல் உலூமுத்தீன் கிதாபில்‌ இந்த‌ நிகழ்வை
பதிவு செய்துள்ளார்கள்.
மதீனா முஸ்லிம்கள் தண்ணீர் அருந்த கிணறு இல்லாத போது யூதனின் கிணறு மட்டுமே இருந்தது. அவர் முஸ்லிம்கள் தண்ணீர் எடுத்து செல்ல அனுமதிக்கவில்லை.

நபிகள் (ஸல்) அவர்கள் இந்த கிணற்றை
யார் வாங்குகிறார்களோ அவர்களுக்கு
அல்லாஹ் மறுமையில் ஒரு ஊற்றையே பரிசாக வழங்குவான்”” என்று வாக்குறுதி அளித்தார்கள். அப்பொழுது உதுமான் (ரலி) அவர்கள் 20 ஆயிரம் திர்ஹம்களுக்கு வாங்கி, அதனை முஸ்லிம்கள் பயன்படுத்திக் கொள்ள தானாமாகவும் வழங்கி விட்டார்கள்.

அப்படிப்பட்ட உதுமான் (ரலி) அவர்களுக்கு
கடைசி நாட்களில் நோன்பு திறக்க கூட
தண்ணீர் தரவில்லை…

அந்நாட்களில் பகலில் நோன்பாளியாக
இருந்தார்கள்…இரவில்‌ தொழுகையில்
நின்றுவிட்டார்கள்…

40வது நாள் நபிகளார்‌ உதுமான் (ரலி)
கனவில் தோன்றி “ஓ உதுமானே நாளை
எங்களிடம் வந்து நோன்பை துறப்பீர்கள்”
என்றார்கள்… உதுமான் ரலி தூக்கத்திலிருந்து எழுந்தார்கள்
அவர்கள் மனைவி நாயிலா கூறினார்கள்
“அந்நாளில் அவர்கள் மிகவும் மகிழ்ச்சி
புத்துணர்வோடு இருந்தார்கள்…”

தனது காவலரை அழைத்து “நான் அல்லாஹ்வின் திருபொருத்தத்தை வேண்டுகிறேன்.இனி யாரும் எனக்காக
இரத்தம் சிந்தும் நிலை இருக்காது என்றார்கள்.

பிறகு குர்ஆன் எடுத்து ஓத ஆரம்பித்தனர்.

கிளர்ச்சியாளர்களில் ஒருவர் உதுமான் (ரலி) அவர்கள் வீட்டு சுவரை ஏறிகுதித்து வந்து அவர்களின் தாடியை பிடித்து
இழுத்து ‘ஆட்சியைவிட்டு கீழிறங்கு’என்றார்.

உதுமான் (ரலி) அவர்கள் பொறுமையாக
“என் தாடியை விட்டுவிடு இந்த காட்சியை உன் தந்தை பார்த்திருப்பாரே ஆனால் இரத்த கண்ணீர் வடித்து இருப்பார்கள் என்றார்கள்.

இந்த வார்த்தையை கேட்ட உடன் அவர் அவர்களை விட்டு செல்ல
அவர்கள் சென்று வந்த வழியை கண்ட
கிளர்ச்சியாளர் இருவர் அதே வழியில் சென்று உள்ளே நுழைந்தனர்.

அவர்கள் வருவதை கண்ட உதுமான் (ரலி)தன்னுடைய கீழாடைகளை இருக கட்டிகொண்டார்கள்.

தான் இறக்கும் நிலையில் தன்னுடைய ஆடைகள் களைந்திட கூடாது என்பதால் , வெட்கத்தில் முழுமையானவர் அல்லவா!!!

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

நபிகளார் கெண்டைக்கால் தெரிய ஆடை விலகி இருந்தது . அபுபக்கர் (ரலி) வந்தார்கள். தன்‌நிலையை மாற்றிகொள்ளவில்லை.உமர் (ரலி)
அவர்கள் வந்தார்கள் தன் நிலையை
மாற்றிகொள்ளவில்லை…
உதுமான் (ரலி) வருகையில் நபிகள் (ஸல்)அவர்கள் தன்னுடைய ஆடைகளை சரிசெய்து கொண்டார்கள். அவர்கள்
சென்ற பிறகு நபிகளாரிடம் கேட்டேன்..
“என் தந்தை வரும்போது உங்கள் நிலையை மாற்றிகொள்ளவில்லை
உமர் (ரலி) வரும் போது மாற்றி கொள்ளவில்லை உதுமான் (ரலி) வருகையில் உடனே உங்கள் நிலையை
மாற்றி கொண்டீர்கள் என்று வினவ
நபிகளார் “மலக்குகள் வெட்கப்படும் ஒரு மனிதரைப் பார்த்து நானும் வெட்கப்படக் கூடாதா?’” எனக் கூறினார்கள்.
(முஸ்லிம்)

கிளர்ச்சியாளர்கள் உதுமான் (ரலி) அவர்கள் தலையை இரும்பு தடியால்
அடித்தனர். இரத்தம் தலையில் இருந்து பீரிட்டு அடிக்க ஆரம்பித்து அவர்கள் ஓதி கொண்டிருந்த குர்ஆனில் முதல் இரத்த துளிகள் விழுந்தன. எந்த குர்ஆன் வசனத்தில் விழுந்தது தெரியுமா???
فَسَيَكْفِيْکَهُمُ”
எனவே அவர்களி(ன் கெடுதல்களி)லிருந்து உம்மைக் காப்பாற்ற அல்லாஹ்வே போதுமானவன்;

அல்குர்ஆன் 2:137

மேலும் அவர்களின்‌ ஒருவன் அவர்களை
வெட்ட வாளை ஓங்கினான்…
அதை தடுக்க அவர்கள் கையை உயர்த்தி
பொழுது அவர்கள் கைகள் வெட்டப்பட்டது…

உதுமான் (ரலி) கூறினார்கள்” வல்லாஹி
இந்த கைதான் குர்ஆனை முதலில் எழுதியது… அந்த கையை தான் நீ வெட்டி இருக்கிறாய் “என்றார்கள் ..

மேலும் அவர்கள் ‌உதுமான்‌ (ரலி) அவர்களை உதைத்து வயிற்றில்
வாளால் வெட்ட முற்பட்டபோது
அவர்களை காப்பாற்ற அவர்களின் மனைவி நாயிலா அவர்கள் உதுமான் (ரலி) மேல் பாய்ந்து விழுந்தார்கள்.
உதுமான் (ரலி) அவர்களின்
நேசத்திற்கு மனைவி அல்லவா…
அவர்களை வெட்டவருகையில்
அவர்கள் கைகளால் தடுக்க
நாயிலா அவர்கள் விரல்கள்‌ துண்டானது
மயங்கி கீழே விழுந்தார்கள்…

அவர்கள் உதுமான் ( ரலி) வயிற்றை
துண்டு துண்டாக வெட்டினர்…

ஈவு இரக்கம் அற்ற அந்த கொடூர
கூட்டம் 82 வயதான உதுமான் (ரலி)
அவர்களை கொலை செய்தது…

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி
ராஜிவூன்…

அவர்கள் உடலை குப்பையை குதறுவது போல் குதறி போட்டனர்.
யாரையும்‌ அவர்கள் உடலை அனுமக்கவில்லை…

மூன்று நாட்கள் கோரமான‌நிலையில் உடல் வீட்டிலேயே இருந்தது…

இந்நிலையில் நபிகளாரின் மனைவியான உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் மஸ்ஜித் நபவி படிகளில்
ஏறி நின்று ” ஓ கலவர காரர்களே
என்னை உதுமான் (ரலி) அவர்களை
அடக்கம்‌செய்ய‌ அனுமதியுங்கள்..
நான்‌ நபிகளாரின் மனைவி …
நபிகளாரின் நேசத்திற்குறியவள்..
இந்த இறைநம்பிக்கையாளர்களின்
தாய் …

நான்‌ என் தலையை முக்காடிடாமல்
இந்த மதீனாவின்‌வீதியில் இறங்கி
நானே உதுமான் (ரலி) அவர்களை அடக்கம் செய்வேன்…
அவர்களுக்கு தெரியும் நபிகளாரின்
மனைவி முன்னால் எந்த கலவரகாரர்களும்
நிற்க மாட்டார்கள் என்று

கஹ்ப் இப்னு மாலிக் (ரலி) அவர்கள்
அறிவிக்கிறார்கள்…
வல்லாஹி உம்மு ஹபீபா (ரலி) அவர்கள்
மதீனாவின் வீதியில் தலையை
முக்காடிடாமல் சென்றார்கள்…
அல்லாஹ் வானிலிருந்து மழையை
இறக்க ஆரம்பித்தான்…

இந்த மிரட்டலை கேட்டு கலவர
காரர்கள் உதுமான் (ரலி) அவர்களை
அடக்கம் செய்ய அனுமதித்தனர்.
இரவோடு இரவாக இரகசியமாக
உதுமான் (ரலி) உடலை எந்த ஆடையுடன்
இரத்தம் படித்து இறந்தார்களோ
அதே ஆடையுடன்…
குளிப்பாட்ட தண்ணீர் இல்லாததால்
அப்படியே அடக்கம் செய்தனர்…
உடலை எடுத்து செல்ல சந்தூக்‌ கூட
பயன் படுத்தவில்லை.. அவர்கள் உடலை
எடுத்து செல்கையில் அவர்கள் உடலை
கல்லெறிந்து அவமதித்தனர் கலககாரர்கள்.

மதீனா முஸ்லிம்கள் அடக்கம் செய்யும்
இடத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்கவில்லை…
இதனால் யூதர்களை அடக்கம் செய்யும்
ஹுஸ் கவ்கப் இல் அடக்கம்‌ செய்யப்பட்டது.

அம்ராதா இப்னு அர்தா (ரலி) அறிவிக்கிறார்கள் ஆயிஷா(ரலி)
ஹஜ் முடிந்து வந்தார்கள்..
உதுமான் (ரலி) கொல்லப்பட்டபோது
அவர்கள் இரத்தம் சிந்திய வசனத்தை
கண்டார்கள்.
فَسَيَكْفِيْکَهُمُ”
எனவே அவர்களி(ன் கெடுதல்களி)லிருந்து உம்மைக் காப்பாற்ற அல்லாஹ்வே போதுமானவன்;
அல்குர்ஆன் 2:137
(டாப்கபி காட்சியகம் துருக்கியில் இன்றும் அந்த குர்ஆனை காணலாம்)

அதனை கண்ட ஆயிஷா (ரலி) அவர்கள்
கூறினார்கள் “வல்லாஹி இந்த கலவரகாரர்களுக்கு கொடூரமான
மரணத்தை கொடு இறைவா.. என்றார்கள்…

அதுபோல் ஒவ்வொரு கலவரகாரர்களும்
கொடூரமாக நோய்வாய்ப்பட்டு இறந்தனர்.

ஹசன் (ரலி ) கூறினார்கள் “நான் நபிகள் (ஸல்) அவர்கள் என் பாட்டனாரை கனவில்கண்டேன் . எப்போதும் பலத்த முகத்தோடு காண்பேன் ஆனால் அன்று மிக சோகமாக
அல்லாஹ்வின் அர்ஷில் நின்று கொண்டிருந்தார்கள்.
அவர்களுக்கு பின் அபுபக்கர் (ரலி) வந்தவர் நபி தோளில் கைவைத்தார்கள்…
பின்‌ உமர் (ரலி) அவர்கள் வந்து அபுபக்கர் (ரலி) தோளில் கை வைத்தார்கள்.பின்பு
உதுமான் (ரலி) வந்தார்கள். முகம் முழுவதும் இரத்தமாக இருந்தது. தனது கையை முகத்தில் வைத்து “யா ரசூலுல்லாஹ் இந்த மக்களிடம் கேளுங்கள் நான்‌ என்ன
பாவம் செய்தேன் என்று என்னை மாட்டை வெட்டுவது போல் வெட்டினர்??? என்றார்கள்…
இதனை கேட்டு அல்லாஹ்வின் அர்ஷ் நடுநடுங்கியது.

நயிலா அவர்கள் உதுமான் (ரலி)
அவர்கள் படுகொலைக்கு நீதி வேண்டி
முஆவியா (ரலி) அவர்களுக்கு உதுமான் (ரலி) அவர்கள் மரணித்த போது அணிந்திருந்த ஆடையையும் தன்னுடைய வெட்டப்பட்ட விரல்களையும்
ஒரு பையில் அனுப்பி வைத்தார்கள்.
அதை கண்ட முஆவியா (ரலி)
அவர்கள் கதறி அழுதார்கள். உதுமான் (ரலி) அவர்களின் சிறிய தந்தை மகன் தான் முஆவியா (ரலி) என்பதால் இந்த
இதற்கு நீதி பெற்று தருவார் என்ற
நம்பிக்கையில் இதை நயிலா அவர்கள்
அனுப்பி வைத்தார்கள்…

அந்த இரத்தம் சொட்டி கொண்டிருந்த உதுமான் (ரலி) அவர்கள் ஆடையை
ஷாம் பள்ளிவாசலில் முஆவியா (ரலி)
அவர்கள் தொங்கவிட்டார்கள்.

இதனை கண்டு அன்று எழுபதாயிரம் முஸ்லிம்கள் கதறி அழுதார்கள்…

அன்றைய முஸ்லிம்கள் மட்டும் அல்ல
இன்று இந்த வரலாற்றை படிக்கின்ற
ஒவ்வொரு முஸ்லிம்களும் கண்ணீர்
வடிப்பார்கள்.

மறுமையில் ஒவ்வொரு நாட்டில் நடக்கும் கொடுமைகளுக்கு அங்கு இறந்த ஷஹீத்கள் சாட்சியாவர்.
உதுமான் (ரலி) அவர்கள் கொலைக்கு
மறுமையில் குர்ஆன் தான்‌ சாட்சி சொல்ல வரும்….

இஸ்லாத்தின் உன்னதம் வாழ வேண்டும் என்பதற்காக தன்னுடைய இன்னுயிரையே இழக்க முன் வந்தார்கள் உஸ்மான் (ரழி) அவர்கள்.
இன்றைய ஆட்சியாளர்கள் தன் ஆட்சியை தக்கவைக்க மக்களிடம் கலவரத்தை உண்டாக்கி ஆட்சியை தக்கவைக்கின்ற அவர்களுக்கு மத்தியில் உஸ்மான் (ரழி) அவர்கள் ஒரு உன்னத ஆட்சியாளர்.
அவர்கள் அமீருல் முஃமீனின் அல்லவா!!!

இறைவா! உன்னுடைய கருணையின் நிழலின் கீழ் வாழக் கூடிய வாய்ப்பை அவர்களுக்கு வழங்கிடுவாயாக..!

நட்புடன்
முஹம்மது ஜுபைர் அல்புஹாரி ❣️