Daily Archives: திசெம்பர் 8, 2023

அறிவு கடல் இமாம் கஸ்ஸாலி‌

*ஆன்மீகஞானி இமாம் கஸ்ஸாலி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் அறிவுபூர்வமான விளக்கம்..!!*


ஒருமுறை ஞானி இமாம் கஸ்ஸாலி ரஹிமஹுல்லாஹ் அவர்கள்
தம் மாணாக்கர்களிடம் ஆறு கேள்விகளைக் கேட்டார்கள். மாணவர்களும் அவர்களுக்குத் தெரிந்த பதில்களைச் சொன்னார்கள்.

அப் பதில்களையெல்லாம் கேட்டுக்கொண்ட இமாம் கஸ்ஸாலி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தங்களுடைய பதில்களையும் கூறினார்கள்.

பக்தாதில் இருந்த உலகப்புகழ்பெற்ற நிஜாமியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தவர்கள் இமாம் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவர்கள் ஏதாவது கேள்வி கேட்டால் பதில் சொல்வதற்கு பதிலாக ஒரு புத்தகமே பதிலாக எழுதிக்கொடுப்பார்களாம்!

✍️கேள்விகளும் பதில்களும் 👇

1. இவ்வுலகில் நமக்கு மிகவும் நெருக்கமானது எது?

பெற்றோர், மனைவி, கணவன், நண்பர்கள், குழந்தைகள் என பல பதில்களை மாணவர்கள் கூறினார்கள்.

இமாம் அவர்களின் பதில்:

உங்கள் பதில்களெல்லாம் சரிதான் என்றாலும் மிகச்சரியான பதிலல்ல. மிகச்சரியான பதில் *இறப்பு* என்பதுதான். ஏனெனில் உயிர் வாழ்பவர்கள் அனைவரும் நிச்சயம் ஒருநாள் இறந்து போவார்கள் என்று அல்லாஹ் கூறியுள்ளான் (சூரா ஆல இம்ரான்: 185).

2. இந்த உலகில் நம்மிடமிருந்து மிக தூரத்தில் இருப்பது எது?

சீன தேசம், சந்திரன், சூரியன் என பல பதில்களை மாணவர்கள் சொன்னார்கள்.

அவைகளெல்லாம் சரிதான் என்றாலும் மிகச்சரியான பதிலல்ல. மிகச்சரியான பதில் நமது *கடந்தகாலம்தான்.* ஏனெனில் நாம் யாராக இருந்தாலும், என்னதான் செய்தாலும், நம் கடந்த காலத்துக்கு மீண்டும் நம்மால் செல்லவே முடியாது. எனவே இன்றைப்பற்றித்தான் நாம் கவனம் கொள்ளவேண்டும். அவைகளை இஸ்லாம் கூறியுள்ளபடி நல்ல செயல்களால் நிரப்ப வேண்டும்.

3. இவ்வுலகில் மிகப்பெரியது எது?

மலை, பூமி, சூரியன் என இக்கேள்விக்கும் பல பதில்களை மாணவர்கள் சொன்னார்கள்.

அந்த பதில்களெல்லாம் சரிதான் என்றாலும் மிகச்சரியான பதில் நமக்கு வரும் *நஃப்ஸ்* எனப்படும் சலனங்கள்தான். எனவே அதன்மீது நாம் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். அது நம்மை நரகில் வீழ்த்திவிடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று கூறினார்கள். (சூரா அஃராஃப், 179).

4. இவ்வுலகில் மிகவும் கனமானது எது?

இந்தக் கேள்விக்கும் இரும்பு, யானை என பல பதில்களை மாணவர்கள் சொன்னார்கள். இந்த பதில்களேல்லாம் சரிதான். ஆனால் மிகச்சரியான பதில் *நம்பகத்தன்மையுடன்* நடந்துகொள்வதுதுதான்.

நம்மிடம் கொடுத்து வைக்கப்பட்ட அமானிதத்துக்கு *துரோகம் செய்யாமல்* நடந்துகொள்வதுதான்.

தாவரங்கள், மரங்கள், மிருகங்கள், மலைகள் எல்லாம் இவ்வுலகின் கலீஃபாவாக இருக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆனால் ஆணவத்தின் பொருட்டு மனிதன் அப்பொறுப்பை ஏற்றுக்கொண்டான். அப்பொறுப்பை நிறைவேற்றாத பலர் அல்லாஹ்வால் நரகில் வீழ்த்தப்பட்டார்கள். ஏனெனில் அவர்கள்மீது அடுத்தவர் கொண்டிருந்த நம்பகத்தன்மைக்குப் புறம்பாக அவர்கள் நடந்துகொண்டார்கள். (சூரா அஹ்ஸாப், 72)

5. உலகிலேயே மிகவும் இலேசானது எது?

பஞ்சு, தூசி, காற்று என பல பதில்களை மாணவர்கள் கூறினார்கள்.

அப்பதில்களெல்லாம் சரிதான் என்றாலும் மிகச்சரியல்ல. மிகச்சரியான பதில் *தினசரித் தொழுகையை விட்டுவிடுவதுதான்.* உடல் நிலை, வாணிகம் என பல காரணங்களைக் காட்டி மனிதர்கள் தொழுகையைத் தவறவிட்டுவிடுகிறார்கள்.

6. உலகிலேயே மிகவும் கூர்மையானது எது?

வாள், கத்தி என பல பதில்களை மாணவர்கள் கூறினார்கள். அவையெல்லாம் சரிதான் என்றாலும் மிகச்சரியல்ல. மிகச்சரியான பதில் *மனித நாக்குதான்.*

திமிர்த்தனமான, அகம்பாவம் பிடித்த பேச்சு அடுத்தவரின் உணர்வுகளைக் காயப்படுத்தும். அதுதான் உலகிலேயே மிகவும் கூர்மையான ஆயுதம் என்று சொன்னார்கள்

இதயத்தின் உயிரானது அறிவுதான். அதைக் காப்பாற்றி வைத்துக்கொள்ளுங்கள். இதயத்தின் இறப்பானது அறியாமையாகும். எனவே அதிலிருந்து விடுபடுங்கள்.

உங்களுக்குக் கொடுக்கப்பட்ட *மிகச்சிறந்த உணவு உண்மையான பக்திதான்.* எனவே அந்த உணவையே உண்ணுங்கள், கொடுங்கள்.

இந்த ஆலோசனை போதும். இதைப்புரிந்துகொண்டு செயல்படுங்கள் என்று கூறி முடித்தார்கள்…!!
ஸுப்ஹானல்லாஹ்..!!

அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ரசூலுல்லாஹ்
அஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலைக்க யா ஹபீபல்லாஹ்